Saturday, February 27, 2016

ஜே.என்.யு, நாட்டுப்பற்று, சில கேள்விகள்

ஜே.என்.யு வளாகத்தில் அனுமதி மறுக்கப்பட்ட ஒரு கூட்டம் நடைபெறுகிறது. கூட்டம் அப்சல் குருவின் தூக்கு தண்டனை குறித்த கேள்விகளை எழுப்பும் நோக்கில் நடைபெறவிருந்தது. அந்த கூட்டத்திள் இருந்த சிலர் 'இந்தியா ஒழிக' என்று காஷ்மீர் விடுதலைக்கு ஆதரவான கோஷங்களை எழுப்பியதால், தகவல் அறிந்த காவல் துறையினர் அம்மாணவர்கள் மேல் தேசதுரோக சட்டத்தின் கீழ் வழக்குகள் போட்டு, அவர்களை கைது செய்கின்றனர். மாணவர் சங்கத்தலைவர்  கண்ணையா குமார் மீதும் அதே சட்டத்தின் கீழ் வழக்கு போடப்படுகிறது. அடுத்த நாள் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அம்மாணவர்களுக்கு தீவிரவாதிகளுடன் தொடர்பு இருப்பதாக பகீரங்கமாக அறிவிக்கிறார். பின்னர் நீதிமன்ற வளாகத்தில் அம்மாணவர்கள் மீதும், மாணவர்களுக்கு ஆதரவு கரம் நீட்டிய இடதுசாரி தலைவர்கள் மீதும் போலீஸின் முன்னிலையிலையே சில பாஜக தொண்டர்களால் வன்முறை கட்டவிழ்க்கப்படுகிறது. சில நாட்களில் ஒரு வக்கீல், கண்ணையா குமாரை போலீஸ் உதைத்ததில் அவர் சிறுநீர் கழித்ததை தான் கண்டு களித்ததாக ஒரு வீடியோவில் பெருமை உடன் ஒப்புகொள்கிறார். பாஜக கட்சியினர் அரசாங்கத்தின் நடவடிக்கை நாட்டு நலன் அடிப்படையில் சரி என்றும் இது போன்ற தேசவிரோதிகள் சுட்டு தள்ளப்படவேண்டும் என்றும் குறிப்பிடுகின்றனர். தமிழ்நாட்டில் இந்த பிரச்னை குறித்து பெரிதாக ஞானம் இல்லாதவர்களில் சிலர் 'தேசவிரோத மாணவர்களை' அரசாங்கம் ஏன் தங்கள் வரிபணத்தை செலவு செய்து படிக்கவைக்க வேண்டும் என்றும், அப்பல்கலைக்கழகத்தை மூடவேண்டும் என்றும் தங்கள் கருத்துகளை முன்வைக்கின்றனர். தேசத்தின் பாதுகாப்புக்கு மேல் எது உயரியது என்றும், மாணவர்களுக்கு எதுக்கு அரசியல் என்றும் பல கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

AFSPA :
1990இல் காஷ்மீரில் AFSPA  என்னும் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்திய பாதுகாப்பு படையினர்களுக்கு, குறைந்தபட்ச சந்தேகத்தின் அடிப்படையிலேயே  யாரைவேண்டுமானாலும் கைது செய்யவும், எங்கு வேண்டுமானாலும் சோதனை நடத்தவும், தேவைப்படும்போது யாரைவேண்டுமானாலும் போதிய எச்சரிக்கைகளுக்கு பிறகு சுட்டுத்தள்ளவும் அந்த சட்டம் அதிகாரம் அளித்தது. வடகிழக்கு மாநிலங்களில் தேசபாதுகாப்பின் பேரில் முதன்முதலில் 1958ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, மணிப்புரிலும் நாகலாந்திலும் பல மனித உரிமை மீறல் புகார்கள்  அச்சட்டத்தின் மீது எழுந்தும், அது 32 வருடங்களுக்கு பிறகு காஷ்மீருக்கும் நீட்டிக்கபடுகிறது.

சட்டம் அமலான ஒரே வருடத்திற்குள் காஷ்மீர் குப்வாரா மாவட்டத்தில்  ஒரு சோதனையின் பேரில் ஒரு கிராமத்தின் 100 பெண்கள் ராணுவ படைவீரர்களால் கற்பழிக்கப்பட்டனர். 1993இல் ஆனந்தனாகில் அமைதியாக நடந்த ஒரு எதிர்ப்பு கூட்டத்தில் எல்லை பாதுகாப்பு படையினர் போதிய காரணம் இல்லாமலேயே துப்பாக்கி சூடு நடத்தி அப்பாவி மக்களில் 35 பேர் கொன்றனர். 2008இல் காஷ்மீரில் பந்திபோரா, பாரமுல்லாஹ், குப்வாரா என்னும் ஊர்களில் Mass Graves என அழைக்கப்படும் கூட்டு மயானக்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அம்மயானங்களில் 3000 உடல்கள் தோண்டி எடுக்கபடுகின்றன. அதில் சுமார் 500 உடல்கள் காஷ்மீரில் வாழும் உள்ளூர் அப்பாவி மக்களுடையது என்னும் தகவல் வெளியானது, AFSPA அமலுக்கு பிறகு நடந்த நமது ராணுவம் நடத்திய பல மனித உரிமை மீறல் சம்பவங்களில் மிக சிலவற்றை மட்டுமே நான் இங்கு குறிப்பிட்டு  இருக்கின்றேன்.

தேசியம் :
வரலாறு தொடங்கிய காலம் முதல் இந்தியா என்னும் சொல் ஒரு பெரிய துணைக்கண்டத்தையோ அல்லது கிழக்கே ஒரு பெரும் நிலபரப்பை குறிப்பதற்கு மட்டுமே பயன்பட்டு வந்தது, அசோகர், அக்பர் என பல சக்திவாய்ந்த மன்னர்களின் காலத்தில் கூட இந்தியா என்பது ஒரு சாம்ராஜ்யம் எனதான் அழைக்கப்பட்டது. சாம்ராஜ்யமும் நாடும் ஒரே பொருள் தருபவை அல்ல, சாம்ராஜ்யம் என்பது பல நாடுகளின் தொகுப்பு. இவ்வளவு ஏன் தமிழகத்தையே சேர, சோழ, பாண்டிய நாடுகள் என மூன்றாகத்தான் பிரித்து நம் வரலாற்று நூல்கள் குறிப்பிடுகின்றன. வெள்ளையர்கள் இந்தியா என்னும் சாம்ராஜ்யத்தை முழுமையாக தங்கள் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வந்து ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு பிறகு தான் இந்திய சுதந்திர போராட்டம் துளிர் விட தொடங்கியது. உலகம் முழுவதையும் தன் காலடியில் கொண்டுவந்த ஒரு பெரும் வல்லரசை எதிர்கொள்ள துண்டு துண்டாக சிதறிகிடக்கும் ஒற்றுமையற்ற தேசங்கள் போதாது என்ற அறிவும், காலனி ஆதிக்க சுரண்டல் கூறுகளை முழுமையாக புரிந்த கொண்ட, சாதி மத மொழி பேதங்கள் கடந்த ஒரு பரந்துபட்ட மக்கள் படையே நமக்கு விடுதலை பெற்றுத்தரவல்லது என்ற சரியான புரிதலும் நம் சுதந்திர போராட்ட தலைவர்களுக்கு இருந்தது. 'தேசியம்' என்னும் சொல், அதுவரை தங்களுக்குள் சண்டையிட்டு கொண்டிருந்த சின்னஞ்சிறு நாடுகளை, 'சுரண்டல்' என்ற ஒரு பொது பிரச்னையை களையும் பொருட்டு,  ஒன்றிணைக்க நம் தலைவர்களால் முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது. நேருவும் காந்தியும் வெள்ளையன் மேல் வெறுப்பு கொள்ளவோ, வெறுப்பு அரசியலை தேசியம் என்னும் பெயரில் மக்கள் மேல் திணிக்கவோ முற்படவில்லை. வெள்ளையனின் சுரண்டல் அரசியலைத்தான் குறிவைத்தார்கள். கிட்டத்தட்ட முக்கால் நூற்றாண்டிற்குள் இந்தியாவுக்கு வெள்ளையனிடம் இருந்து சுதந்திரமும் பெற்று தர இந்தியாவை வழிநடத்தினார்கள்.

நேரு ஆட்சிக்கு வந்தபிறகு பல சிற்றசர்கள், நவாப்கள் என பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி, இந்தியா என்னும் புதிய நாட்டுடன் எல்லா தனி நாட்டு மக்களுக்கும்  இணைய விருப்பம் உள்ளனவா என்பதை உறுதி செய்த பிறகே, இந்தியா முதன்முதலில் ஒரு தனிப்பெரும் நாடாகவும், 1950இல் ஒரு குடியரசாகவும் அறிவிக்கப்பட்டது. 1952இல் நடந்த ஒரு பாராளுமன்ற உரையில் காஷ்மீரின் எதிர்காலத்தை காஷ்மீர் மக்களே தீர்மானிக்கட்டும் என்றும், அவர்கள் நம்முடன் இணையவில்லை என்றால் அதை வலியுடன் நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என்றும், மக்கள் விருப்பதை மீறி பலவந்தமாக யாரையும் நம்வசம் வைத்துக்கொள்ளவேண்டாம் என்றும் நேரு, காஷ்மீர் மக்களுக்கு உறுதி அளித்தார். தேசியம் என்னும் சொல் அன்பின் அடிப்படையில், விருப்பத்தின் வழி மட்டுமே முழுமையான அர்த்தம் பெரும் என்ற புரிதலுடன் பேசப்பட்ட வார்த்தைகள் அவை.


ஜே.என்.யு:
ஜே.என்.யு பல்கலைக்கழகம் காலம் காலமாக இடதுசாரி சிந்தனைகளின் வளர்ப்பிடமாகவும், பல துறைகளில் பெரும் அறிவுஜீவிகளை உருவாக்கும் சிறந்த அறிவுத்தொழிற்சாலையாகவும் , பல தரபட்ட மாணவர்கள் உணர்வுகளாலும், கருத்துக்களாலும் சங்கமிக்கும் சிந்தனைசமுத்திரமாகவும் விளங்குவதை அந்த பல்கலைகழகத்தை பற்றி நன்கு அறிந்தவர்கள் ஒப்புகொள்கிறார்கள். எந்த ஒரு வெறுப்புணர்வும் இல்லாமல், வெவ்வேறு சித்தாந்தங்கள் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் மாணவர்களை, ஒருவருக்கு ஒருவர் ஆரோக்யமான விவாதங்களில் ஈடுபடசெய்யும் அந்த பல்கலைகழக சூழல் இந்தியா என்னும் ஒரு பரந்துபட்ட ஜனநாயகத்திற்கு சிறந்ததோர் முன்னோடியாக விளங்குவதை நான் கேள்விப்பட்டு இருக்கிறேன். மாட்டிறைச்சி உண்பதற்கு ஆதரவு தெரிவிப்பவர்களை பாகிஸ்தானுக்கு அனுப்ப ஆசைப்படும் அரசாங்கம் மத்தியில் இருக்கும்போது, ஜே.என்.யு போன்ற பல்கலைகழகத்தை இத்தனை நாட்கள் எப்படி விட்டுவைத்தார்கள் என்றே எனக்கு இன்னும் விளங்கவில்லை.

அப்சல் குருவை தூக்கிலிட, முறையற்ற விசாரணையும், நம்பகமற்ற ஆதாரங்களும், இஸ்லாமிய தீவிரவாதத்தின் மேல் அரசாங்கத்துக்கு இருக்கும் குருட்டு தனமான வெறுப்புணர்வும், அதன் விளைவாய் உறுதிசெய்யபடும் வாக்குவங்கியுமே காரணங்களாய் அமைந்ததென பல மனித உரிமை அமைப்புகள் அடித்துசொல்கின்றன. அவர்களுடைய கூற்றை நாம் முழுமையாக ஏற்கவேண்டிய அவசியம் இல்லை. நம் காவல் துறையும், நீதித்துறையும் அரசாங்கத்தின் கைப்பாவைகளாக வேலை செய்கிறார்களோ என்ற சந்தேகம் நமது வாழ்வில் ஒரு நொடி கூட நமக்கு வந்ததில்லையா என்ன ? அப்படி சந்தேகிக்கும் ஒருவர் நம்மிடம் தன சந்தேகத்தை முன்வைக்கும்போது அவரை நாம்  தேசதுரோகி என அழைத்தால் அது சரியான நிலைப்பாடாகுமா ?

'மற்ற பிரச்னைகளுக்கு நீங்கள் சொல்வது சரி. ஆனால் இது தீவிரவாதம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்லவா? காஷ்மீர் பிரிவினைவாதத்திற்கு ஆதரவு தெரிவிப்பது தேசதுரோகம் தானே ?' என நீங்கள் எதிர்கருத்து கூறலாம். ஒருவர் அப்சல் குரு தூக்கிலிடப்பட்டதை கேள்விக்குட்படுத்தினால் அவர் காஷ்மீர் பிரிவினைவாதத்தை ஆதரிப்பவர் என ஆகிவிடுமா ? கண்ணையா குமார் என்னும் மாணவர் தலைவர், அப்சல் குரு வழக்கை பற்றி விவாதிக்க போடப்பட்ட ஒரு கூட்டத்தை தலைமை தாங்கினால் அவர் காஷ்மீர் பிரிவினைவாதி ஆகிவிடுவாரா? கண்ணையா குமார் இந்தியாவுக்கு எதிராக பேசியதாக சொல்லப்படும் காணொளி ஆதாரம் நீதிமன்றத்தில் இன்று வரை அரசாங்கத்தால் சமர்பிக்கப்படவில்லை. ஆதாரமில்லாமல் கைது செய்யப்படும் கண்ணையா சட்டவிரோதமாக போலிசாரால் அடித்து நொறுக்கபடுகிறார். கைது நடந்த மறுநாளே எந்த ஆதாரமும் இல்லாமல் அம்மாணவர்கள் லஷ்கர் போன்ற தீவிரவாத கும்பலைச் சேர்ந்தவர்கள் என உள் துறை அமைச்சர் அறிவிக்கிறார்.

இம்மாணவர்களின் கோஷங்கள் இந்தியாவையும், காஷ்மீரில் இரவு பகல் பாராமல் எல்லையை காத்து நிற்கும் நம் ராணுவ வீரர்களையும் அவமதிக்கின்றன என பலர் சொல்கிறார்கள். AFSPA சட்டத்தின் கீழ் நமது வீரர்கள் அப்பாவி மக்கள் மேல் நிகழ்த்திய கொடுமைகளை வைத்து அவர்களுடைய தியாகங்கள் அனைத்துமே கட்டுக்கதை என்று உங்களை நான் நம்பச் சொல்லவில்லை. 'இந்தியா ஒழிக' என கோஷிப்பவர்களை குருட்டுத்தனமாக தீவிரவாதிகள் என முத்திரை குத்தாமல் அவர்கள் ஏன் அப்படி செய்தார்கள் எனத் தெரிந்துகொள்ளும் திறந்த மனநிலையை நாம் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதையே கோடிட்டு காட்ட விழைகிறேன்.

அப்படி கோஷித்தவர்கள் AFSPA -வினால் பாதிக்கப்பட்டவர்களாக இருக்கலாம். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து ஆவன செய்ய அரசாங்கம் முன்வர வேண்டும். அவர்களில் ஒருவர் AFSPA -வினால் பாதிக்கப்படாதவர் எனில், அவர் உண்மையிலேயே காஷ்மீர் பிரிவினைவாதத்தை நம்புபவர் எனில், அவருடைய கருத்துக்களையும் அரசாங்கம் கேட்டுத்தெரிந்து கொண்டு தங்கள் நிலைபாட்டையும், அந்நிலைப்பாட்டின் நியாயங்களையும் விவாதம் மூலம் புரியவைக்க வேண்டும். ஒரு அரசாங்கம் ஆனது, தனக்கு ஒவ்வாத அல்லது எதிரான  கருத்தை ஒருவர் வன்முறையை விடுத்து அற வழியில் முன்வைக்கும்போது, அவரை தன் வசம் இருக்கும் பலத்தை வைத்து அடக்க நினைப்பது சரி தானா என சிந்திக்கவேண்டும். ஒரு இடது சாரி கட்சி ஆட்சியில் இருக்கும்போது இந்துத்துவ அமைப்புகள் கோட்சேவுக்கு சிலை வைத்து, காந்திக்கு எதிரான கருத்துக்களை பேசினால் அவர்களை தேசதுரோகிகள் என கைது செய்து அவர்கள்மேல் வன்முறையை கட்டவிழ்ப்பதும் தவறு தான். எந்தவித கொள்கையின் நியாயங்களும் அறவழியில் முன்வைக்கப்படும்போது அவற்றுக்கு அறவழியில் பதிலளிப்பதே ஒரு நாகரிகமான ஜனநாயகத்திற்கு அழகு.

தேசவிரோதிகள் என்ற சொல்லைப் பயன்படுத்தும் நமது அரசாங்கம் 'எங்கள் அமைச்சர்களே நாட்டுப்பற்று கொண்டவர்கள்' என மார்தட்டி கொள்ளும்போது 'தேசியம்',' நாட்டுப்பற்று' போன்ற வார்த்தைகள் காலத்தின் போக்கில் அர்த்த மாற்றங்கள் அடைந்திருப்பதாக நான் உணர்கிறேன். தேசியம் என்னும் சொல், சுதந்திர போராட்ட காலகட்டத்தில் அன்பின் அடிப்படையில் நமது தலைவர்கள், நமக்குள் ஒற்றுமையைப் பேண பயன்படுத்தியதாகும். இன்று பாஜக அரசு நம்மிடம் விற்க நினைக்கும் தேசியம் பாகிஸ்தான் மேலும், ஒட்டு மொத்த இஸ்லாமிய சமுதாயத்தின் மேலும் நம்மிடை இல்லாத வெறுப்புணர்வை அடிப்படையாக கொண்டு உருவாக்கபட்டதுபோல தோன்றுகிறது.

'அப்துல் கலாம் முஸ்லிமாக இருந்தாலும், தேசியவாதியாகவும், மனிதநேயராகவும் வாழ்ந்தார்' என பாஜக அமைச்சர் ஒருவர் ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறார். இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிகளின் போது நமக்கு இயல்பாக ஏற்படும் பாகிஸ்தானிய வெறுப்பு இந்த 'புதிய தேசியத்துக்கு' கை கொடுக்கும். 'நாங்கள் பீகாரில் தோல்வி உற்றால் பாகிஸ்தானில் பட்டாசு வெடித்து கொண்டாடுவார்கள்' என்றார் அமித் ஷா. பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருப்பதனால் பாகிஸ்தானையே வெறுக்கும் போக்கைத்தான் இந்த 'புதிய தேசியம்' நமக்கு கற்பிக்கிறது. அப்படி ஒரு தேசியம் நமக்கு தேவையே இல்லை.

வெள்ளையனை விரட்டிய பின்பும் தேசியத்தின் பயன் என்ன என்பதை நான் பல நாட்களாக யோசித்துக்கொண்டு வருகிறேன். விடுதலைக்கு பிறகும் நம் மக்களில் முக்கால்வாசி பேர் வறுமையில் தான் வாழ்கிறார்கள். நமது தேசியம் ஏன் நமக்கு சோறு போடவில்லை ? 'தேசியத்தை வளர்த்தெடுத்து, நாம் பாகிஸ்தானையும் தோற்கடித்து, இந்திய முஸ்லிம்களையும் அடக்கிவிட்டு நின்றால், எல்லா காலி வயிறுகளுக்கும் சோறு கிடைத்துவிடுமா ?' என கேட்டார் அருந்ததி ராய்.

சுதந்திரம் அடைந்த பின்பு, இந்தியா, எகிப்து. சீனா, இந்தோனேசியா என பல விடுதலை அடைந்த சுமார் 50க்கும் மேற்பட்ட நாடுகளை எல்லாம் ஒருங்கிணைத்து NAM (NON ALIGNED MOVEMENT) என்னும் மாபெரும் கூட்டியக்கத்தை நேரு உருவாக்கினார். ஐரோப்பாவிடம் அடிமைப்பட்டிருந்த எல்லா நாடுகளும் ஒரே நாடு போல் கைகோர்த்து, தங்கள் முதல் எதிரியான வறுமையை ஒழிக்க வேண்டும் என்னும் உயரிய கொள்கையோடு உருவாக்கபட்டது அந்த கூட்டியக்கம். அம்மாநாடுகளில் யாரும் தேசியம், நாட்டுப்பற்று என பழைய கதைகளையே பேசிக்கொண்டிருக்கவில்லை.

நாடுகள், மாநிலங்கள், நகரங்கள் என இறைவன் நம்மை பிரித்து படைக்கவில்லை. இவ்வுலகத்தில் தற்செயலாக பிறக்கும் ஒவ்வொரு உயிருக்கும் தன் சுற்றத்தை பாதிக்காத வகையில் தன விருப்பம் போல் முழு சுதந்திரத்துடன் வாழ உரிமை உண்டு. மனிதர்கள் உருவாக்கிய அரசாங்கம், நாடு போன்ற செயற்கை சட்டகங்களுக்குள் அவ்வுயிர்கள் தம்மை பொருத்திக்கொள்ள வேண்டிய அவசியமும் இல்லை. இது காஷ்மீருக்கும் பொருந்தும் தமிழகத்துக்கும் பொருந்தும்.

சுரண்டுபவனுக்கு நாடு ஒரு பொருட்டு அல்ல.ஹிட்லர் போலந்து, ஆஸ்திரியா போன்ற வேறு நாட்டுமக்களை மட்டும் கொல்லவில்லை. தன் நாட்டு மக்களான லட்சக்கணக்கான யூதர்களையும் சேர்த்து தான் கொன்று குவித்தார். உலகத்திற்கு தேசியம் என்னும் பாடத்தை பரப்பியவரும் அவர்தான்.

தேசபற்று :
'உங்களுக்கு தேசபற்றே இல்லையா?' என என்னிடம் கேட்காதீர்கள். நான் என் பிழைப்பிற்காக பிரெஞ்சு நிறுவனத்தில் ஒரு நாளைக்கு 11 மணிநேரம் வேலை பார்ப்பவன். கூலியை  மிச்சப்படுத்த என் மலிவான உழைப்பை கடல் கடந்து கவர்ந்து போக வந்திருக்கிறான் பிரெஞ்சுக்காரன். கூலி குடுப்பவனுக்கு இல்லாத தேசபற்று உழைக்கும் எனக்கு எதற்கு ?

No comments:

Post a Comment