Monday, January 16, 2017

எழுத்தின் வேர்

காற்றின் வருடல்

இல்ல. காத்து மேல படுது ஜில்லுனு.
சுத்தி பச்சை பசேல். அங்க அங்க பூமில இருந்து முளைச்ச மாறி வீடுங்க.
இருட்டுது. எழுத ஆச தூண்டுது. ஆனா கொஞ்ச நேரத்துல என் பொண்டாட்டி 'மாடி இருந்தது போதும் .. கீழ வா' னு கூப்டுவா. நான் பெரிய writer னு இந்த உலகத்துல எனக்கு மட்டும் தான் தெரியும்.

தெரிஞ்சும் எல்லார் மாதிரி இருந்து குழந்தை குட்டி பெத்துட்டு அதுங்களுக்கு கல்யாணம் பண்ணி வெச்சுட்டு பேர புள்ளைங்கள மட்டுமே பாத்துட்டு சாக எனக்கு விருப்பம் இல்ல.

இப்போ வரைக்கும் இல்ல. இனிமே வரலாம்.அதுக்கு முன்னாடி நான் ஏதாது செய்யணும். என்னை நேசிக்கிறவங்க முன்னாடி  காலர்- தூக்கி காட்டற மாதிரி.

நான் சாதாரணன். பெரிய எழுத்தாளன்,  அபூர்வ கற்பனைசாலி, கருவில் உறங்கும் கருத்தா, பண்பாளன் என என்னை நான் அழைத்துக்கொண்டாலும் சாமானியர்களின் அன்றாட செயல்களுக்கும் என்னுடைய செயல்பாட்டிற்கும்  பெரிய வித்தியாசம் கண்டறிய முடியாது.

நானும்  வீட்டு வேலையை செய்ய என் வீட்டுப்பெண்களையே எதிர்பார்ப்பேன் . நானும் 'என்' சமூகத்தை சேர்ந்தவளைத்தான் தேடி திருமணம்  முடித்தேன். ஐம்பது பவுன் நகை பெற்றேன் மாமனாரிடம்.

கோகோ கோலா விரும்பி குடிப்பேன். ஆட்டோக்காரனிடம் ஐந்து ரூபாய்க்கு பத்து நிமிஷம் பேரம் பேசி விட்டு மல்டிப்ளெஸ் திரைஅரங்கிற் 400 ருபாய் கொடுத்து வரிசையில் நின்று கால் வயிறு பாப் கார்ன் வாங்கி உண்பேன். என் பெயர் 'கம்யூனிஸ்ட்'.

வெட்குகிறேன்.

இதோ ஒப்புதல் வாக்குமூலமே  எழுதிக்கொண்டிருக்கிறேன் கொஞ்சம் கொஞ்சமாக.

குற்றவாளிக்கூண்டில் நிற்கிறேன் கூனிக்குறுகி.

தெளிந்த முகமாய் நீதிபதி பீடத்தில் என் மனசாட்சி கருப்பு கவுனில். பார்ப்பதற்கு LIC நரசிம்மனை போல் இல்லை .

'குற்றங்களை ஒப்புகொண்டுவிட்டாய். அதனால் உன்னை விடுவிக்கிறேன். இனிமே இப்படி செய்யாதே போ '

'சரிங்க எஜமான்'

நீதிமன்ற வாசலில் இறங்குகிறேன்.

என்னை மன்னித்த நீதிபதிக்கு தெரியும் நான் திருந்தவில்லை, திருத்தவும் மாட்டேன் மீண்டும் இதே தவறுகளை செய்வேன் என்று. எப்படி என்னை விடுவித்தார் ?

நான் சாமானியன். எங்கள் ஊர் சட்டம் அப்படி. நீதிமன்றங்களும் அப்படிதான்.

சாமானியர்கள் தவறுகளை தெரிந்தே செய்வார்கள். மனம்  என்னும் நீதிபதி எப்படியோ அவர்களை மன்னித்துக்கொண்டே இருக்கும், சில நேரங்களில் சமய சந்தர்ப்பங்கள், கலாச்சார மரபுகளை லஞ்சமாய் பெற்று.

எரிச்சலாய் வருகிறது, நானும் சாமானியன்  என என்னை கருதும் போது .

இலவசம் என தெரிந்தவுடன் கால் வலிக்க வரிசையில் கூடி நின்று, தன் கை விரல் ரேகையை அடகு வைத்து ஜியோ சிம் வாங்கி அதை எதற்கு பயன்படுத்த வேண்டும் என்று கூட தெரியாத சாமானியர்களும் நானும் ஒன்றா ?


சிக்னல் பச்சை ஆகும் கணம் முன்பே கரண்ட் ஷாக் போல் ஹாரனை செலுத்தும் அந்த சாமானியனும் நானும் ஒன்றா?

ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு மணிநேரம் வேலை செய்து விட்டு மாதம் ஓரு லட்சம் ஊதியம் பெற்று ABCD சொல்லித்தர ஒரு லட்சம் பீஸ் கேட்கும் பள்ளியில் தன் பிள்ளையை சேர்க்க வரிசையில் நிற்கும் அந்த சாமானியப்பதரும் நானும் ஒன்றா ?

ஆமாம் தான் போலிருக்கிறது.

இல்லை. நான் ஒப்புக்கொள்ளப்போவது இல்லை .

நான் சாமானியன் அல்லன். நான் மேம்பட்டவன். அறிவால். சிந்தனையால்.

'சொல்லடி சிவசக்தி என்னை சுடர்மிகு அறிவுடன் படைத்துவிட்டாய் ?'


தீண்டத்தகாதவர்களுக்கு பூணூல் போட்டு அந்தணர் ஆக்கிய புரட்சி கவி் பாரதியின் வரிகளை திருடக்கூட  என் போன்ற hypocrite-களுக்கு என்ன யோக்கியதை இருக்கிறது ??


நான் தான் என் குற்றங்களை எல்லாம் ஒப்புக்கொண்டு விட்டேனே ? எனவே நான் அயோக்கியன் ஆகமாட்டேன்.


யூதர் இனப்படுகொலைக்கு முழுப்பொறுப்பு ஏற்று தன் குற்றங்களை ஒப்புக்கொண்டு Nuremberg-இல் ஒரு வேளை ஹிட்லர் சரண் அடைந்திருந்தால் அவர் காந்தி ஆகி இருப்பாரா ?

நான் ஒரு வெறுக்கத்தக்க சாமானியன் மட்டும அல்ல. Hypocrite.

அந்த வார்த்தையை கவனித்து பாருங்கள். காகிதத்தில் எழுதப்பட்ட அந்த ஆங்கிலச்சொல்லுக்கு ஒரு உருவமே தெரிகிறது . 'Hypo' என ஆரம்பித்து ஓசையில் மேலெழும் அந்த சொல் 'crite' என இறுதியில் பெட்டைத்தனமாக  சுருங்கி அடங்கி  விடுகின்றது. என் போன்ற hypocrite - களும்  அப்படி தான். முதல் சந்திப்பில் நாங்கள் பேசும் சித்தாந்தங்களும், கொள்கை நியாயங்களும் எங்களை 'மேம்பட்டோர்' போல வெளிக்காட்டினாலும் பழகிய  சில நாட்களில் எங்களின் சாயம் வெளுத்து விடும்.

முதலில் சாமானியன். இப்பொ hypocrite. நல்ல முன்னேற்றம்.

என் hypocrisy - கண்டு என்னை வெறுத்தவர் இது வரை இல்லை. அதனால் நான் hypocrite அல்லவே? என் சுற்றத்தில் நான் இன்னும்   மதிக்கப்படுகிறேன். எனவே நான் ஏன் குற்ற உணர்ச்சி கொள்ள வேண்டும் ?

ஆனால் என் 'அரைவேக்காடு' சமூகத்தின் மேலோட்டமான மதிப்பீடுகளை வைத்து இவ்வாறு என்னை விடுவித்துக்கொள்ள எனக்கு விருப்பம் இல்லை.

'சொல்லுதல் யார்க்கும் எளியவாம் அறியது சொல்லிய வண்ணம் செயல்'

வள்ளுவனின் வார்த்தைகளே என் போன்ற கம்யூனிஸ்ட்-களை  அளக்க  சரியான  மதிப்பீடுகளாக  இருக்கட்டும்.

வள்ளுவனின் கறாரான மதிப்பீடுகளின் படி நான் ஒரு பொய்யன்.

hypocrite க்கு இணையான சக்திவாய்ந்த இழிச்சொல் 'பொய்யன்'.

பொய்யன் தவறு செய்துவிட்டு பொய் சொல்வான். hypocrite சொல்லிவிட்டு தன் தவற்றின் மூலம் தன் சொல்லை பொய்ஆக்குவான்.

சாமானியன், hypocrite, இப்போ பொய்யன் .

நீதிமன்றத்தில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டாலும் குற்றப்பத்திரிகை தாக்கல் இன்னும் முடிந்தபாடில்லை.

மீண்டும் ஒரு வேளை என்னை சம்மன்  செய்தால் எனக்காக வழக்காட யார் இருக்கிறார்கள்?

நான் என் பெற்றோர்களை நேசிப்பவன். இணையாக மிக குறுகிய காலத்தில் என் மனைவியையும்.

அவள் வருவாளா என்னை காப்பாற்ற ?

நான் சிறையில் இருக்கிறேன் என அவளுக்கு தெரியுமோ என்னவோ ? என்னை உத்தமன் என நினைத்துக்கொண்டிருப்பவளிடம் எப்படி சொல்லுவேன்  நான் ஒரு accused  என்று ?

'மாமா.. கீழே vaa . சாமி கும்புடனும். அப்பா கூப்பிட்டாரு'

சரி. எல்லாம் இருக்கட்டும் . அடுத்த hearing அப்பறோம் வெச்சுக்கலாம். தலைப்பொங்கல்க்கு மாமனார் வீட்டுக்கு வந்திருக்கோம். கீழ வஞ்சிரம், சங்கரா லாம் அடுப்புல எனக்காக வெந்துருக்கு ஆட்டுக்கறியோட.

நல்ல நாள் அதுவுமா எதுக்கு கோர்ட் கேஸ்- லாம் ?


ம்ஹூம்.

மனம் கேட்கவில்லை.

அடுத்த சம்மனில் இந்த வழக்கில் வென்றே தீருவேன்.

ஆனால் அடுத்த சம்மன் என்னைக்கு ? இன்றைக்கேவா ?

நீதிமன்றக்கதவுகள் இன்னும் மூடப்படவில்லை. எப்பொழுது வேண்டுமானாலும் அழைக்கப்படலாம்.

பொங்கல் சிறப்பு அமர்வு.


இத்தனை போராட்டங்கள் இன்று, நேற்று மட்டும் அல்ல.

சில ஆண்டுகளாய். தினமும். சில நாட்களில் ஒவ்வொரு மணிநேரமும்.

ஒரு சாமானியன் இத்துணை முறை நீதிமன்றத்துக்கும் வீட்டுக்கு அலைவானா ? பொங்கல் அன்று கூட விடுமுறை இல்லாமல்.

கண்டிப்பாக இல்லை .

ஒவ்வொரு தவறு செய்யும்போதும் என்போல் கடுமை ஆன மன உளைச்சலுக்கு ஆள் ஆவானா?

எனவே நான் சாமானியன் இல்லை.

இந்த மனப்போராட்டங்களே என்னை சாமானியனிடம் இருந்து வேறுபடுத்திகாட்டுகின்றனவா?

தெரிய வில்லை.

தேடுவேன்.

என்னை நானே.

என் எழுத்தே எனக்காக வழக்காடட்டும்.